மாறாதிருக்கும் அரசியல் மாற்றங்களை உருவாக்கிட உறுதியோடு உழைப்போம் – டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தி

இல்லாமையில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுபட்டு உயரிய வாழ்வின் மகிழ்ச்சியை எல்லா மக்களும் அனுபவிக்க இன்றைய தீபாவளி திருநாள் அமைய வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இருளைக் கிழித்து வெளிக்கிளம்பும் சூரியன் போல், எமது வரலாற்று வாழ்விடங்களிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும். நிரந்தர தீப ஒளிகள் உங்கள் இல்லங்கள் தோறும் ஏற்றப்பட வேண்டும். இருள் அகன்று, ஒளி மயமான எதிர்காலம் ஒன்று உருவாக வேண்டும்.

வலிகளையும் வதைகளையும் வாழ்வெங்கும் துயரச் சுமைகளாக சுமந்து வந்த எமது மக்களின் துயரங்கைத் துடைக்க எழுந்து வந்து நாம் ஆற்றிய அர்ப்பணங்களுக்கும் உரியதான வெகுமதிகளும் விமோசனங்களும் முழுமையாக கிடைக்க வேண்டும்.

நாம் ஒரு தேசிய இனம். எமது மண்ணில் சுதிந்திர பிரஜைகளாக நாம் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு மலர வேண்டும். இன்னமும் மீண்டு வராத அரசியல் கைதிகள் விரைவாக விடுதலையாகி வர வேண்டும். இதுவரை மீட்கப்படாத எமது மக்களின் சொந்த நிலங்கள் மீட்கப்பட வேண்டும். எமது நிலங்கள் எமக்கே சொந்தம் என்ற உரிமை எமக்கு வேண்டும்.

இல்லாமையில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுபட்டு உயரிய வாழ்வின் மகிழ்ச்சியை எல்லா மக்களும் அனுபவிக்க வேண்டும். இந்த இலட்சியக் கனவுகள் நிறைவேறும் காலமே எமது மண்ணில் நிரந்த ஒளி வீசும் காலமாகும்.

சூழ்ந்து வரும் சூழ்சிகளை வென்று சரிந்து கிடக்கும் எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மேலும் தூக்கி நிறுத்திட, மாற்றங்கள் நிகழவேண்டிய அரிய இத்தருணங்களில் இன்னமும் மாறாதிருக்கும் அரசியல் மாற்றங்களை உருவாக்கிட, நாம் உறுதி கொண்டு உழைப்போம் என்ற நம்பிக்கையோடு பிறந்து வரும் தீபாவளி திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு