யாழ். மாவட்ட மக்களுக்கான உதவிகள் வழங்குமாறு நோர்வே தூதுவரிடம் கோரிக்கை (Photos)

யாழ். மாவட்டத்தில் வலி. வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்;வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்திற்கு இன்று (19) காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் மற்றும் அவரது குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் போது, மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், அண்மைக்காலங்களில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வாதார திட்டங்கள் எவை என்பது பற்றியும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது, யாழ்;. மாவட்டத்தில் வலிகாமம் வடக்கினைத் தவிர்ந்த அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், மக்களின் வாழ்வாதார திட்டங்கள் வழங்குவது தொடர்பில் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தூதுவர் உறுதியளித்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளிலுள்ள எமது புலம்பெயர் மக்கள் இங்குள்ளவர்களுக்கு உதவி புரிவது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளதுடன், புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் இலங்கையிலுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்குரிய சலுகைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றுடன், மயிலிட்டி துறைமுகம் மற்றும் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மீனவ குடும்பங்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்தும் நோர்வே தூதுவர் குழுவினர் ஆராயவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு