அரசாங்கத்தின் ஊழல் சர்வதேச வங்கிகள் வரை சென்றுள்ளது?

தாய்வான் வங்கியொன்றில் பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக, லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷாலிலா மூனசிங்க கைது செய்யப்பட்டமை, இந்த அரசாங்கத்தின் ஊழலும் கொள்ளையும், மத்திய வங்கியிலிருந்து சர்வதேச வங்கிகளுக்குச் சென்றுள்ளமையைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஷாலிலா மூனசிங்க, அரசாங்கத்துடன் தொடர்புகளைக் கொண்ட ஒருவராவார். வங்கி மீதான இணையத் தாக்குதலை மேற்கொண்டவர், இலங்கையில் உயர் பதவியை வகிப்பவராவார். அவரை யார் நியமித்தார்கள்? அவரைப் போன்றவர்களுக்கு யார் அதிகாரங்களை வழங்கினார்கள்? அரசாங்கத்தின் ஏனைய உயர்தரப்பினருடன் அவருக்கு என்ன தொடர்பு காணப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச சதி காணப்பட்டது என்ற குற்றச்சாட்டை மீள வலியுறுத்தியதுடன், இந்தச் சதியின் முக்கிய அம்சமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சீர்குலைத்தல் காணப்பட்டது என்றும், அந்த இலக்கு, தற்போது அடையப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். தவிர, ஆசிரியர்களை முழங்காலில் நிற்குமாறு பணித்த, சு.க வேட்பாளர்களும் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு