அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் பதில்?

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வேண்டுகோளுக்கு இரண்டொரு தினங்களில் சாதகமான பதில்களை தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கருணாகரன் உள்ளிட்ட 09 பேர் நேற்று (19) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதுவரையில் 117 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளதுடன், 25 அரசியல் கைதிகள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக இருக்கும் நிலையில், இவர்கள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்கினால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாவார்கள்.

முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலை செய்துள்ளார். ஆனால், அரசியல் கைதிகள் 117 பேரை விடுவதற்கு நீங்கள் யோசிக்கின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகள் வவுனியா நீதிமன்றில் 58 தடவைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 67 சாட்சிகளில், 64 பேர் இராணுவம், ஏனையவர் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். விமானத்தின் மூலம் சாட்சிகளை அழைத்து வந்து சாட்சியமளிக்க முடியும்.

அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் வருகின்றார்கள். நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபடுகின்றார்கள். முன்னாள் அமைச்சர்கள் உட்பட தற்போதுள்ள அமைச்சர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்ற போது, ஏன் சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லை என நினைக்கின்றீர்கள், சாட்சிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியவில்லை என்றால், ஏன் இந்த அரசு என்ற கேள்வி எழுந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டியதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு