இரட்டைக் கொலையை எதிர்த்து போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சவுக்கடி, குடியிருப்பு முருகன் கோவில் வீதியிலுள்ள வீடு ஒன்றில் 27 வயதுடைய தாயும் அவரது 11 வயதுடைய மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு, கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் பயிலும் மதுசன் மற்றும் அவரது தாயான மதுசாந்தி பீதாம்பரம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இவர்களின் படுகொலை தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மற்றும் விஷேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படுகொலையை கண்டித்தும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர், பாடசாலை சமூகம், கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

பல்வேறு சுலோகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கியவாறு பிரதான வீதியூடாக குடியிருப்பு பொது நூலகம் வரை சென்றதுடன், அங்கு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு நிறக் கொடிகளையும் அணிந்திருந்தனர்.

வித்தியாவின் கொலைகளை தொடர்பான சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி வழங்கியது போன்று இந்த கொலை தொடர்பிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.