மண்ணெண்ணெயில் இயங்கும் பயணிகள் பஸ்கள்

பயணிகளுக்கான தனியார் பஸ்களை இயக்குவதற்கு, டீசலுக்குப் பதிலாக, மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படும் விடயம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புலனாய்வு அணியொன்றால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமது செலவுகளைக் குறைப்பதற்காகவே, மண்ணெண்ணெயை இவர்கள் பயன்படுத்துவதாகவும், ஆனால், மீனவர்களும் மின்சாரமில்லாத இடங்களில் இருப்பவர்களும் பயன்பெறுவதற்காகவே சலுகை விலையில், மண்ணெண்ணெய் விற்பனையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஈடுபட்டு வருகிறது.

எனவே அச்சலுகை விலையில் மண்ணெண்ணெய் வாங்கி, பின்னர் பஸ்களை இயக்குவதற்காக அதைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக அக்கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில், பயணிகள் போக்குவரத்து பஸ்களை இயக்குவதற்கு இயந்திரத்துக்கான எண்ணெயுடன், மண்ணெண்ணெயைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறதெனத் தெரிவித்துள்ளார்.

யுத்தக் காலத்தில் வாகனங்களை இயக்குவதற்கு இலங்கையின் வடக்குப் பகுதியிலேயே இவ்வாறு மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு