ஜகத் ஜெயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு சிக்கலை உருவாக்கலாம்

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நாட்டில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு, இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாமென ஐ.நா எச்சரிக்கை செய்துள்ளது.

இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விஷேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் தனது இரண்டு வாரகால விஜயத்தின் முடிவில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் இராணுவத் தளபதி ஜயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பொறுப்புக் கூறல் கோரப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் 2009ஆம் ஆண்டு, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் காணாமல் ஆக்கப்படுவதற்கும், சித்திரவதை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்த இராணுவ குழுக்களுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தாரென தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமை குழுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜயசூரியவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தன.

யுத்த மோதல்களுடன் தொடர்புபட்ட சம்பவங்கள் குறித்து உரிய நம்பகமான பொறுப்பு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும், யுத்தத்தின் பின்னரான நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கின்றது என்றும் பப்லோ டி கிரிவ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் காணாமல் போனோருக்கான அலுவலகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதற்கான அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு