அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான தீர்வு வரும்

அண்மையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்துள்ளதற்கு அமைவாக, ஒரு தீர்வு சாதகமான வருமென நம்புவதாக வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தீபாவளி நிகழ்வில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது ஜனாதிபதியின் செயலாளருடன் பேசிய போது, அவர் கூறியிருந்த விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டால் அந்தச் செய்தி தெற்கு மக்களுக்குச் சென்றடையும். அதன் பின்னர் ஜனாதிபதி நீதித்துறையில் தலையீடு செய்கிறார் என்பது தெற்கில் உணரப்பட்டால் சிறைகளிலுள்ள முன்னாள் படையினர் மற்றும் பல்வேறு குற்றவாளிகள் விடயத்திலும் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென தெற்கிலும் அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டத்தின்படி எதிரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவே இடம் உள்ளது. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்க இடமில்லை. குறிப்பாக மூதூர் வழக்கு எதிரிகளுக்கு பாதுகாப்பு இல்லாமையால் திருகோணமலையில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட போதிலும், சாட்சிகளுக்குப் பாதுகாப்பில்லையெனத் தெரிவித்து, வவுனியாவில் இருந்து வழக்குகளை அநுராதபுரத்துக்கு மாற்றுவது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. இந்த விடயத்தில் சட்டமா அதிபர் முரண்பாடான தீர்மானத்தை எடுத்திருப்பதாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தன்னுடன் தொடர்புகொண்ட தமிழ் அரசியல் கைதிகள், தங்களை வைத்து அரசியல் நடப்பது குறித்து மிக வருத்தப்பட்டதாகவும், அவ்வாறு அரசியல் நடத்துவதைத் தவிர்த்து, தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு