வவுனியா நகரை மாநகரமாக தரமுயர்த்த வேண்டும் – டக்ளஸ்

மிகவும் வேகமாக வளர்ந்துவரும் மற்றும் சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவரும் வவுனியா நகரை மாநகர சபையாக தரம் உயர்த்த வேண்டுகின்றேன் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களது கலந்துரையாடலில் முன்வைத்த அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் மேலும் பல பிரதேச சபைகளின் உருவாக்கம் மற்றும் பிரதேச சபைகளின் தரம் உயர்த்தல் சம்பந்தமாகக் கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றேன். பின்வரும் பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபை இல்லாத காரணத்தினால் அங்கே உள்ளூராட்சி சபைச் சேவைகள், குப்பை அகற்றல், சந்தைப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு போன்ற சேவைகள் செயலற்றுக் காணப்படுகின்றன.இச் சபைகளாவன, யாழ். மாவட்டத்தின் மருதங்கேணி, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான், மன்னார் மாவட்டத்தின் மடு. இந்த நான்கு பிரதேசங்களும் மிகப் பெரியவை மற்றும் மிகவும் பின்தங்கியவையாகும். இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல் பின்வரும் நகர்களுக்கு நகரசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். இந்த நகர்கள் – கிளிநொச்சி, முல்லைத்தீவு, மானிப்பாய், சுண்ணாகம். சங்கானை, நெல்லியடி ஆகும். பிரதமரே உங்களுக்குத் தெரியும் கிளிநொச்சி ஒரு மிகவம் பெரிய நகர் என்பது. இது சுமார் 4 கிமீ தூரம் பரந்தன் முதல் முறிகண்டிவரை பரந்து உள்ளது.

இது கரைச்சி பிரதேச சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சபையால் கிளிநொச்சி நகரத்தின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் உள்ளது. மேலும் கரைச்சி பிரதேச சபை கண்டாவளை பிரதேச செயலகத்தையும் நிர்வகிக்கவேண்டி உள்ளது. உங்களுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன்.

அதாவது 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி நகர சபையாகவே இயங்கி வந்தது. மேலும் கிளிநொச்சி நகர்தான் கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக நகர். இது விவசாய, வர்த்தக, நிதி மற்றும் கல்வி துறைகளுக்கு வடமாகாணத்தில் உள்ள ஒரு மையமாகும். முல்லைத்தீவு நகரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக நகராகும். இதுவும் 1991ஆம் ஆண்டிற்கு முன்னர் நகரசபை அந்தஸ்தை அனுபவித்தது. இதே போல் மானிப்பாய், சுன்னாகம், சங்கானை, நெல்லியடி நகர்களும் 1991ஆம் ஆண்டிற்கு முன்னர் நகரசபை அந்தஸ்தைக் கொண்டிருந்தன.

இவையாவும் இன்று நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. இங்கெல்லாம் நகர சபை நிர்வாகம் அமையாததால் நகரங்களின் தேவைகளும் சேவைகளும் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றது. எனவே இங்கு மேலே கூறப்பட்ட பிரதேசசபைகளை வரவுள்ள தேர்தலுக்கு முன் தரம் உயர்த்தி நகர சபைகளாக மேம்படுத்துமாறு தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

யாழ். நகரமே வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு மாநகர சபையாகும். ஆதலால் இத்தருணத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவரும் வவுனியா நகரை மாநகர சபையாக தரம் உயர்த்த வேண்டுகின்றேன். இத் தரமுயர்த்தல் இந் நகரை மேலும் வளர்ச்சியடையச் செய்யும். அங்குள்ள மக்களும் மிக உயர்ந்த சேவைகளைப் பெறமுடியும். இத்தருணத்தில் நான் நாட்டின் மற்றைய பிரதேசங்களைப் பற்றி பேசாவிடின் நான் எனது கடமையில் இருந்து தவறியவன் ஆவேன்.

கிழக்கு மாகாணத்தில் மாகாணத் தலைநகரான திருகோணமலையை மாநகர சபையாகத் தரம் உயர்த்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். மேலும் செங்கலடி, களவாஞ்சிக்குடி, மூதூர், கிண்ணியா போன்ற பிரதேச சபைகளும் நகர சபைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று (வாழைச்சேனை), ஆகிய பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இங்கே பிரதேச சபைகள் இன்மையால் உள்ளூராட்சி சேவைகள் மிகவும் முடங்கிக் காணப்படுகின்றது. தயவு செய்து இவைகளுக்கும் பிரதேச சபைகள் அமைக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். கல்முனை நகரில் சாய்ந்த மருது பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வேளையில் அங்குள்ள தமிழ்ப் பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

இந்தத் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் துன்பங்களும் நீண்ட காலமாகவே தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கமும், ஒற்றுமையும் பாதிக்கப்பட்டுள்ளது. தாங்கள் நாட்டில் சமூக, இன நல்லிணக்கத்திற்காக குரல் கொடுத்து அதை பலப்படுத்தி வருகிறீர்கள். ஆதலால் இந்த கல்முனை விடயத்தை விரைவில் தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு தீர்த்து வைக்கவேண்டும்.தற்போது தெற்கில் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்தைப் பிரதேச சபையாக்குமாறும் மற்றும் அக்குரஸ, தெனியாய, அக்மண போன்ற நகர்களை நகர சபையாக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம், தரமுயர்த்தல் சம்பந்தமாக ஐம்பதிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் முடிவு காணப்படாமல் நீண்ட காலமாகத் உள்ளூராட்சி அமைச்சிடம் உள்ளதாக அறிகின்றேன். அண்மையில் நான் அறிந்தவரையில் 15 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் உள்ளூராட்சி சபைகள் அமைக்கவும், தரம் உயர்த்தவும் தகுதிகள் யாவை என வரையறுத்துள்ளதாக அறிகிறேன். ஆனால், இக் குழு மிகவும் பின்தங்கிய, மக்கள் அடர்த்தி குன்றிய பிரதேசங்களான வடமத்திய மாகாணம், வடமாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் போன்றவற்றின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளத் தவறியுள்ளனர். மேலும் இந்த குழுவில் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் எதுவும் கிடையாது. இவர்களின் பரிந்துரைகள் மேற்கூறப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு