சவுதி அரேபியா விரைவில் மிதமான இஸ்லாமியத்திற்கு திரும்புமென அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற சவுதி – சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தக முதலீடுகள் குறித்த நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சவுதி அரேபியா மிதமான இஸ்லாமியத்திற்கு விரைவில் திரும்பி அனைத்து மதங்களுக்கும் திறந்த நுழைவாயிலாக இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தீவிரவாத எண்ணங்களை ஊக்குவிப்பவர்களை ஒழிக்கும் நடவடிக்கையிலும் சவுதி ஈடுபடவுள்ளதாக சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதியில் பெண்களுக்கு எதிராக பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும், சமீப காலமாக சவுதி அரசர் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் போன்றோர் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கான விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை 30 நாட்களுக்குள் வழங்குமாறு அமைச்சரவைக் குழுவிற்கு சவுதி அரசர் உத்தரவிட்டார். இந்த ஆணை 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சவுதி அரச குடும்பத்தின் இந்த நடவடிக்கைகள் அந்நாட்டின் முற்போக்குவாதிகளிடம் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், சவுதி மிதமான இஸ்லாமியத்திற்கு திரும்பப்போவதாக சவுதி இளவரசர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.