பிரபுக்கள் பாதுகாப்புடன் இலங்கை அணி விளையாடும்

பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு, அரச தலைவருக்குரிய பிரபுகளுக்கான பாதுகாப்பை வழங்குவதாக, பாகிஸ்தான் உத்தரவாதமளித்துள்ளதுடன், பூரண பாதுகாப்புக்கும் உத்தரவாதமளித்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், லாஹ{ரில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தமக்கு அறிவித்துள்ளதுடன், பாதுகாப்பு நிலவரம் மற்றும் அதற்குரிய ஏற்பாடுகள் குறித்து பொலிஸ்மா அதிபரிடமும் தான் அறிக்கையொன்றைக் கோரியுள்ளதாகவும், அது தொடர்பில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பாதுகாப்புத் தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபை தமக்கு உத்தரவாதமளித்துள்ளதாகவும், அரச தலைவருக்குக் கொடுக்கப்படும் பிரபுக்களுக்கான பாதுகாப்பு, இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படுமென உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாகிஸ்தான், நாடு என்ற வகையில் எமக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதையும் நாம் நினைவுபடுத்த வேண்டும் என்றும், இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது, அவர்கள் எமக்கு ஆதரவு வழங்கியிராவிட்டால், யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது, இங்கு வரவேண்டாமென பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்த வேளையில், பாகிஸ்தான் அணியினர் நம் நாட்டில் விளையாடினார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு