ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்துவோம் – வடகொரியா மிரட்டல்

பசுபிக் பெருங்கடல் பகுதியில் நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்படுமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வருகிறது. அதில் பெரும்பாலானவை அமெரிக்காவின் அலாஸ்காலை குறிவைத்தே இடம்பெறுவதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், வடகொரியா மீது ஐ.நா பொருளாதார தடைவிதிக்கவும் ஆதரவு தெரிவித்தன.

அமெரிக்காவின் மிரட்டல், பொருளாதார தடையால் கோபமடைந்த வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து, தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடத்திவரும் நிலையில், வடகொரியாவை தடம் தெரியாமல் அழித்து விடுவோமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

அதற்கு வடகொரியா எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பதிலளித்ததுடன், சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை பசுபிக் பெருங்கடல் பகுதியில் நடத்தப்படுமென வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தாங்கள் நிச்சயம் பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்துவோம். இது வெறும் வார்த்தையல்ல என உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரிய வெளியுவுத்துறை அமைச்சக அதிகாரியின் இந்த பேச்சு உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வடகொரியாவின் நடவடிக்கையால் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு