வடமாகாண மரநடுகை மாதம்

வடமாகாண மரநடுகை மாதம் நாளை மறுதினம் புதன்கிழமை (01) முதல் ஆரம்பமாகி நவம்பர் 30ஆம் திகதி வரை கொண்டாடப்படவுள்ளதுடன், பல்வேறு திட்டங்கைளயும் அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக வடமாகாண விவசாய கமநல சேவைகளும், நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாய விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சினூடாக கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு மரநடுகை தொடர்பான செயற்திட்டங்கள் எமது அமைச்சினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதன் அடிப்படையில் நாளை மறுதினம் முதல் தொடர்பான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரத்திற்கு அருகாமையிலுள்ள சிவபுரம் கிராமத்தில் நாளை மறுதினம் மரநடுகை அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள பயனாளிகளுக்கு பயன்தரு மரங்கள் மற்றும் பழமரக் கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, வடமாகாணத்திலுள்ள 25 பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒரு கிராமம் தெரிவு செய்யப்பட்டு அக்கிராமத்திலிருந்து பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு பயனாளிக்கும் 05 பழமரக் கன்றுகளும்; வழங்கப்படவுள்ளதுடன், வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களிற்கு நிழல் மரக்கன்றுகளும் விநியோகிக்கப்படவுள்ளன. பொது அமைப்புகளுக்கும் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.

மேலும், மரம்நடுகை மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு என 02 பிரிவாக வலய ரீதியாக நடாத்தப்படவுள்ளதுடன், போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு