சித்த மருத்துவபீட மாணவர்கள் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவர்கள் இன்று கைதடி ஏ-9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காலை முதல் இன்று மதியம் வரை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கோஷங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் வகுப்புக்களையும் புறக்கணித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகத்தினால் நிர்வாக முடக்கல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்தின் சகல நடவடிக்கைகளையும் முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் இன்று (30) முற்பகல் மூடப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்தவிதமான விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைகளை செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும், சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவலநிலை உணர்ந்து பொறுப்புக்கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்களை பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு