வேலைவாய்ப்பு வழங்கலில் புறக்கணிப்பு; கிழக்கு மாகாண பட்டதாரிகளின் அவல நிலை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடத்தப்பட்ட போதிலும், இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுள் ஒரு தொகுதியினர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்றது. இப்பரீட்சையில் மும்மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6,880 பட்டதாரிகள் தோற்றியிருந்த நிலையில், 2,868 பட்டதாரிகள் சித்தியடைந்துள்ளனர்.

எனினும், சித்தியடைந்தவர்களுள் ஒரு தொகுதியினர் மாத்திரமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்முனையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் வேலையற்ற பட்டதாரிகள் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.