பாற்பண்ணையாளர்களை பலப்படுத்த நடவடிக்கை

வெளிநாட்டு பால்மா கம்பனிகள் இங்கு ஆக்கிரமிக்க இடமளிக்காது, தேசிய பாற்பண்ணையாளர்களைப் பலப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள், தேர்தல்களில் வாக்கைப் பயன்படுத்தி செய்ய வேண்டியது, ஊழல் மோசடி இல்லாத மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதாகும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, தூய அரசியல் இயக்கத்தின் மூலம் தான் முடியும் எனவும் பொலன்னறுவை அரலங்வில பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குழந்தைகளுக்கான பால்மாவுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏனைய பால்மாக்களுக்குக் கட்டுப்பாட்டை விதித்து, தேசிய பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் பெரும்தொகை நிதி செலவிடப்படுவதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், உலகின் அபிவிருத்தியடைந்த எந்தவொரு நாடும், வெளிநாட்டுப் பால்மாவை பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பால்மாவை அதிகம் பயன்படுத்தும் நாடாக மாறியிருப்பதுடன், இந்தநிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்பதுடன், நாட்டை முன்னெடுத்துச் செல்கின்றபோது ஊழல் மோசடி இல்லாத நேர்மையான அரசியல் முகாம் ஒன்று அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு