இளைஞர்களுக்கு இனிப்பான வரவு செலவுத் திட்டம்

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நேற்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கொடும் பிடிக்குள் சிக்கியிருந்த ஊடகத்துறைக்கு, இப்போது அதிகமாகவே சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்தச் சுதந்திரத்தைச் சிலர் முறையாகப் பயன்படுத்துகின்ற போதிலும், பலர் அதனை இனவாதப் பரப்புரைக்கும் மதவாதத் தூண்டுதலுக்குமே பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான எதிர்க்கருத்துகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அனைத்து விமர்சனங்களும் தம்மை வளப்படுத்த உதவும் என்பதால், எதனையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் அடைந்ததன் பின்னர், தெற்காசியாவின் வளம்மிக்க நாடாகத் திகழுமென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை, பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் இளைஞர்கள் சிந்திப்பதுடன், நாட்டை எவ்வாறு முன்னேற்றலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து, இனவாதத்தைத் தூண்டிச் சண்டை பிடிப்பதிலும் மதச் சண்டைகளைத் தூண்டிவிடுவதிலும் காலத்தைக் கடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் இலங்கையை உயர்த்துவதே தமது இலக்கு என்றும், அதற்காக இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்றும், நாளை சமர்ப்பிக்கவுள்ள வரவு – செலவுத் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென உறுதிபடக் கூறமுடியும் என்பதுடன், குறிப்பாக இளைஞர்களுக்கு இனிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு