கூட்டமைப்பை பிளவுபடாமல் தடுக்க முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகள் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டுள்ள போதும் கூட்டமைப்பை பிளவுபடாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” (டி.பி.எல்.எப்) மத்திய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த சனிக்கிழமை ரெலோ, தமிழரசுக் கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆகியன இணைந்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்ததாகவும், அதில் அடிப்படையில் எல்லோரும் இணைந்தே பயணிக்கவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள தாங்கள் பலமாக இருக்க வேண்டும் என்பதனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எதிர்வரும் 12ஆம் திகதி கூடவிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தேர்தலில் தனியாக போட்டியிடப் போவதாகவும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது என்னும் தீர்மானத்தை எடுத்துள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் கலந்துரையாடுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு