விரைவில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் – ஈ.பி.ஆர்.எல்.எப்.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மிக விரைவில் புதிய முன்னணி ஒன்று தோற்றுவிக்கப்படுமென தமிழர் விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்கால அரசியல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் நேற்று யாழ். பொது நூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த சில வருடங்களாக மாற்றுத் தலைமையினை வலியுறுத்தி வந்துள்ள நிலையில், இன்றைய சூழ்நிலையில் மாற்றுத் தலைமையின் அவசியம் அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், இலங்கைத் தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை முழுமையாக கைவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், சமஷ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பு என்ற விடயங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சரியான தலைமைத்துவமும், புதிய முன்னணியும் தேவையென அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய முன்னணி தேவை என்பதனை தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில் எதேச்ச அதிகாரப் போக்கில்தான் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுத்து வருகின்றனர் எனவும், கூட்டமைப்பிற்குள் விவாதங்கள் நடாத்துவதில்லை. ஓரிரு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் திணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகளை நிராகரிப்பது மாத்திரமல்ல. இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போன்று ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் தலைவர் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரமாட்டாரென சிங்கள தலைவர்கள் முத்திரை குத்தும் அளவிற்கு சம்பந்தனின் செயற்பாடுகள் உள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற பாரிய கேள்வி இருப்பதாகவும், அரசியல் சாசனம் இன்னும் மிகமோசமாக பாதிக்கப்பட்டு, சமஷ்டி என்று கூறுவதெல்லாம் போலித்தனமானது எனவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய முன்னணி அவசியம். மிக விரைவில் அவ்வாறான அமைப்பு தோற்றுவிக்கப்படும் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு