87 வர்த்தகர்களுக்கு இறுதி அறிவித்தல்

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் 87 பேருக்கு கரைச்சி பிரதேச சபையால் இன்று இறுதி அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கனகபுரம் வீதியில், வீதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அகற்ற வேண்டும் எனவும் அறிவிக்கும் கடிதமே, பிரதேச சபையால் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியானது, 30 மீற்றர் அகலமுடையது. அதன் இரு புறங்களிலுமுள்ள வியாபாரிகள், தங்களின் வியாபார நடவடிக்கைகளை வீதியின் மத்தியிலிருந்து 15 மீற்றருக்கு அப்பால் மேற்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான வியாபாரிகள் வீதிக்கு மிகமிக அருகிலேயே தங்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களில் பயணிப்பவர்கள், தங்களுடைய வாகனங்களிலிருந்து இறங்காது வீதியில் நின்றபடியே பொருட்களைக் கொள்வனவு செய்யுமளவுக்கு வியாபார நிலையங்கள் காணப்படுவதாகவும், இது போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருப்பதுடன், வடிகாலமைப்பை மேற்கொள்ள முடியாத நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கால நகரின் திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்கும் பெரும் தடையாகவும் இவ்வியாபார நடவடிக்கைகள் காணப்படுவதாகவும் பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், கரைச்சி பிரதேச சபை அதிகாரிகளுக்கும் குறித்த 87 வியாபாரிகளுக்கும் இடையில், 2016.05.04, 2016.12.24, மற்றும் 2017.07.30 ஆகிய தினங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, வியாபாரிகளுக்கான அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன. இதன் இறுதி அறிவித்தலே இன்று விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு