பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் சீ.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு

இலங்கை முழுவதிலும் அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோல் நெருக்கடி தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, அமைச்சரவைச் செயற்குழுவின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இவ்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 3ஆம் திகதி முதல், இலங்கையில் திடீரென பெற்றோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், சுமார் ஒரு வாரகாலத்துக்கு நீடித்த இந்நெருக்கடி, பொதுமக்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், அரசியல் ரீதியாக ஏராளமான அழுத்தத்தை அரசாங்கத்துக்கும் வழங்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக, 04 பேர் கொண்ட அமைச்சரவைச் செயற்குழுவொன்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்த நிலையில், குறித்த குழுவின் அறிக்கை நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில், மேலதிகமான பெற்றோல் கையிருப்பை வைத்திருக்காமை, அவசர நிலைமையில் பெற்றோல் விநியோகிப்பதற்கான முறைமையொன்று இல்லாமை ஆகிய காரணங்களால் பெற்றோலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை முழுமையாக விசாரிப்பதற்காக, மேலதிக காலம் வழங்கப்பட்ட இக்குழு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தாலும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனியாலும், பெற்றோலுக்காக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் இரண்டுமே, ஒரே நேரத்தில் எவ்வாறு தாமதமாகிதாக சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எரிபொருளுக்கான கொள்முதல் கட்டளையை வழங்கிய பின்னர், நாட்டுக்கு அக்கப்பல் வருவதற்கு, 21 நாட்கள் தேவைப்படும். சில நிலைமைகளில், குறைந்தது 62,000 தொடக்கம் 65,000 மெற்றிக்தொன் பெற்றோல், இக்காலத்தில் கையிருப்பில் இருந்திருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே, இவ்விடயம் தொடர்பில் சி.ஐ.டி விசாரணைக்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு