உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி

நான்கு தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த இத்தாலி அணி 2018ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது.

சுவீடன் அணியுடனான பிளே ஒஃப் சுற்றில் இத்தாலி அதிர்ச்சித் தோல்வியடைந்தமையே இதற்கான காரணம். இத்தாலி அணி 1934, 1938, 1982 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், தகுதிச்சுற்றுப் போட்டிகளின் பிரகாரம், 32 அணிகள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், தகுதிகாண் சுற்றொன்றில் இத்தாலி மற்றும் சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டி இரண்டு கட்டங்களைக் கொண்டதுடன் முதற்கட்டத்தில் சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாம் கட்டம் இத்தாலியின் மிலான் நகரிலுள்ள சென் செரினோ அரங்கில் நேற்றிரவு விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியில் இரண்டு அணிகளின் வீரர்களாலும் கோல் போட முடியாது போக, முதல் கட்டத்தில் முன்னிலை பெற்ற சுவீடன் அணி வெற்றியை தனதாக்கியதால், 1958ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி அணி இழந்துள்ளது.

2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் ஜூன் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு