நலன்புரிக்கான நிதியில் குறைப்புச் செய்யப்படவில்லை

நலன்புரி சேவைகளுக்கான எந்த நிதியும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் குறைக்கப்படவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (15) நடைபெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்பயிற்சிக் கல்விக்கென 325 பில்லியன் ரூபாய் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாம் போட்டிமிக்க உலகொன்றிலேயே வாழ்கின்றோம். ஏற்றுமதிகள் மூலம்தான் நாம் மக்களுக்கான வருமானங்களை ஈட்டுகின்ற போதிலும், நலன்புரி சேவைகளுக்கான எந்த நிதியையும் தாம் குறைக்கவில்லை எனவும், குறைந்தளவிலான வருமானம் ஈட்டுவோருக்குப் பாதுகாப்பு வலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலன்புரி சேவைகளுக்காக 183 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 129 பில்லியன் ரூபாய், தேசிய வரவு – செலவுத் திட்ட திணைக்களத்தின் ஊடாகச் செயற்படுத்தப்படுவதாகவும், 44 பில்லியன் ரூபாய் சமுர்த்தி நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உர மானியம், சிறு தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, கல்விக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றோருக்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலேயே, 13 வருட பாடசாலை கல்வியைக் கட்டாயமாக்கும் திட்டத்தை நோக்கி தாம் பயணிப்பதுடன், பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழில் கல்வியையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர், தாம் உயர்கல்வியை தனியார் மயப்படுத்த முயற்சிப்பதாக சைட்டம் சர்ச்சையைப் பயன்படுத்தி பிரசாரம் செய்ய முயற்சிக்;கின்ற போதிலும், அது முற்றிலும் பொய்யான பிரசாரம் எனவும், அரச பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு