ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகிறதென்றால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்?

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால் நாட்டைக் கெடுப்பவர்கள் யாரென நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா எம்.பி, சுயாதீன ஆணைக்குழுக்களின் தேவை என்ன என்ற கேள்வி எழுகின்றபோது, நாட்டை நல்ல முறையில் கட்டியெழுப்புவதற்காக என்றொரு பதிலும் கிடைக்கின்றது. அப்படியானால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? என்றொரு கேள்வி எழுகின்றது. அதற்கு அரசியல்வாதிகள் என்றொரு பதிலும் முன்வைக்கப்படுகின்றது. இந்த அரசியல்வாதிகள் யார்? தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்களது பிரதிநிதிகள் என்பதே இதற்கான பதிலாகும். தேர்தல் என்பது எமது நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துகின்ற ஒரு முறைமையாக இருக்கின்றது.

மக்களால் கோரப்படுகின்ற அனைத்தையும் அரசியல்வாதிகளால் சுயாதீனமாக மேற்கொள்ள முடியாது என்ற நிலையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கிடைப்பதில்லை எனக் கருதப்படுகின்ற சுயாதீனமானது, அதிகாரிகளின் மூலமாக மக்களுக்கு நியாயமான முறையில் கிட்டுமா என்பதுவும் ஒரு சாரார் மத்தியில் நிலவுகின்ற கேள்வியாகவே இருக்கின்றது என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு