இனவாத மனோநிலை பாரிய தீபோல் உருவெடுத்துள்ளது – ஜே.வி.பி

ஒரு தீக்குச்சியினால் பாரிய தீ உருவாவது போல், இலங்கையில் இனவாத மனோநிலை உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடா? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்கு கூறவேண்டும். இலங்கையின் தேசிய கொடி தொடர்பில் பல்வேறு தர்க்கரீதியான விவாதங்கள் இருக்கலாம் என்ற போதிலும், அரசியல் அமைப்பின் பிரகாரம் அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது கட்டாயமானது என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை புறக்கணித்தமை வெளிப்படையாக இனவாதத்தை சுட்டி நிற்கின்றது. இந்த இனவாதம் வடக்கில் இருந்து உருவாகின்றதா, அல்லது தெற்கில் இருந்து உருவாகின்றதா என்பது அவசியமானதல்ல எனவும், இனவாதம் என்பது மேலும் இனவாத்தை போசிப்பதாகவே அமைவதாகவும், தமிழ் இனவாதம் வலிமை பெறுகின்ற போது, அதற்கு எதிராக சிங்கள இனவாதமும் வலிமை பெறும் என்பதால், தேசிய நல்லிணக்கத்தின் மூலமே இனவாதத்தை தோற்கடிக்க முடியும் என்பதுடன், இனவாதத்தை தோற்கடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இனவாதத்தை வலியுறுத்தி அரசியல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நாடு பிளவுபடுவதாகக்கூறி பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வடக்கிலும் இனவாதத்தை வலியுறுத்தும் தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் செயற்பட்டு வருவதாகவும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு