பகிரங்க விவாதத்திற்குத் தயார் – சுமந்திரன் சவால்

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள், முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாதென போலி தேசியம் பேசுபவர்களாக இருப்பினும், அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முதலில் முழுமையாகப் படித்துவிட்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதுடன், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தெரியாதவர்களே மக்கள் மத்தியில் குழுப்பநிலையை உருவாக்குகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிமலன் சௌந்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், சமஷ்டி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை, சமஷ்டியை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் சிங்களவர்கள் எனவும், இதை முதலில் பிரித்தானியர்களுக்கு பரிந்துரை செய்தவர்கள் கண்டிய சிங்கவர்கள் என்பதால், இது சிங்கள மக்களுக்கு எதிரானதென எவரும் கூற முடியாது எனவும், இந்த விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் அரசியலமைப்பு மக்கள் பார்த்து பயப்படும் ஒன்றாக இருக்க கூடாது எனவும், சொற்களைக் கண்டு பயந்தால் அந்த சொற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்களைப் பார்க்க வேண்டும் எனவும், அனைத்துப் பாராளுமன்ற சட்டங்களும் மாகாண சபை நியதிச் சட்டங்களும் துணைநிலை சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படுதல் வேண்டும் எனவும் உபகுழு அறிக்கையிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் சிங்கள மொழி மேலோங்குமென கூறப்படவில்லை, வருகின்ற சட்டத்திலேயே மூன்று மொழிகளுக்கும் சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளதென எவராலும் கூற முடியாது எனவும், தாங்கள் தற்போது அரைவாசி தூரம்தான் வந்துள்ளதாகவும், இது சரிவரும் சரிவராமலும் போய்விடலாம் சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினால் இப்போதே வெளிவாருங்களென கூறும் மூடன் யார்? மூடத்தனமாக, மக்களை வீணாக உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணான பீதியை செலுத்தி இதுகாலவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வருகின்ற சந்தர்ப்பத்தை நாங்களே மளுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டுமென சொல்லுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு