பஷிலுக்கு எதிரான வழக்கை விசாரிப்பது தொடர்பில் விரைவில் அறிவிப்பு

தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாதிருப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு, சட்டமா அதிபரால் 24ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான, நிதியைப் பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்துடனான சுமார் 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டதாக பஷிலுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், பஷில் ராஜபக்ஷவின் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக இந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் பிறிதொரு வழக்கில் தீர்ப்பளித்த கிஹான் குலதுங்க, கடந்த ஆட்சிக் காலத்தின் போது, அரச அதிகாரிகள் அழுத்தங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வந்ததாக நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்டதாகவும், இதுபோன்ற கருத்துக்களை கூறும் நீதிபதியிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் பஷில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்ததுடன், தனக்கு எதிரான வழக்கை பிறிதொரு நீதிபதியிடம் மாற்ற உத்தரவிடுமாறும் அவர் அதில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு