குளங்களைப் புனரமைக்க நடவடிக்கை அவசியம் – டக்ளஸ்

விவசாயத்துறைக்கு அதிக பயன் தருகின்ற குளங்களை இனங்கண்டு தூர்வாருவதற்கும், இத்திட்டத்தை இதனுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக முன்னெடுத்து ஏனைய அனைத்துக் குளங்களையும் படிப்படியாக தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நிலைபேறான விவசாயம் தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் 08 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் தூர்வாரப்படுதல் திட்டத்தில் வடக்கு மாகாணமும் உள்ளடக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் முதன்மை அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, விவசாயத்துறைக்கு அதிக பயன் தருகின்ற குளங்களை இனங்கண்டு தூர்வாருவதற்கும், இத்திட்டத்தை இதனுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக முன்னெடுத்து ஏனைய அனைத்துக் குளங்களையும் படிப்படியாக தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதும் கூட ஒருசில குளங்கள் புனரமைப்புச் செய்கின்றபோது, மேலோட்டமான புனரமைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டால் குளத்தினடி, கால்வாய்கள் போன்றவை கைவிடப்படுகின்றன. வாய்க்கால்கள், குளத்தினடி என்பன புனரமைக்கப்பட்டால், அணைகள் கைவிடப்படுகின்றன. இந்நிலை மாற்றம் பெற்று, குளங்கள் அனைத்தும் முழுமையாகவே புனரமைக்கப்படுதல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குளங்களின் நீர் ஆவியாதலைக் கட்டுப்படுத்தும் வகையில், அதனைச் சுற்றி மரங்களை நடுவதற்கும், புற்தரைகளை உருவாக்குவதற்குமான ஏற்பாடுகளும் அவசியம் தேவையாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், அந்தவகையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சுமார் 2,000ற்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், சுமார் 54 பெரிய குளங்களும் இருப்பதாகவும், இவற்றில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குளங்கள் புனரமைப்பிற்குட்படுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு