நல்லாட்சிக்குள் முறுகல் – கூட்டு விரைவில் உடையும் நிலை

நல்லாட்சியின் கூட்டுக்குள் பாரிய நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கூட்டு உடைந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்தால் மட்டுமே, இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சி அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் கைகோர்த்துக்கொண்டு, புதிய கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த யோசனைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் வகையிலேயே கருத்துகளைக் கூறியுள்ள போதிலும், இந்த விவகாரம் தொடர்பிலான இரகசியப் பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிட்டால், அரசாங்கத்திலிருந்து சு.க விலக வேண்டுமென, ஐ.தே.கயினர் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றமையைத் தொடர்ந்தே இவ்வாறான புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு