விகிதாசார முறையில் தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்து

வழமையான விகிதாசார முறையிலேயே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கோரி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் முன்னரைப் போன்று அல்லாது தற்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருகின்றன. இது நல்லாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையதல்ல என்பதை கருத்திற் கொண்டே இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியினை தோற்றுவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்த முயலும் கலப்பு தேர்தல் முறைமையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதனாலேயே அதற்கு எதிராக அடிக்கடி மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும், எனவே, அது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வெளியாகி எப்போது தேர்தல்கள் நடக்கும் என்பது யாரும் அறியாத விடயம் என்பதுடன், மக்களின் உயரிய உரிமையான வாக்குரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதை நாம் இலகுவாக கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வஜன வாக்குரிமை மறுக்கப்பட்டமை தொடர்பான கசப்பான அனுபவத்தை கிழக்கு மாகாண மக்கள் கடந்த சில தசாப்தங்களாக உணர்ந்துள்ளமையை இந்த இடத்தில் சுட்டிக்காட்டியாக வேண்டும் எனவும், இந்த சந்தரப்பத்தில் நாம் விகிதாசார முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதன் ஊடாக மக்களுக்கு தற்போது தமது வாக்குரிமை தொடர்பில் ஏற்பட்டுள்ள அதீத அச்சம் மற்றும் சந்தேகத்தை போக்க முடியும் என்றும் முன்னாள் முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு