டக்ளஸ் – சிவாஜிலிங்கம் கருத்து மோதல்

கடந்த அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து கொண்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரிவருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவரின் பாவங்களை மன்னிக்க வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக பொது மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவுடனும், பஷில் ராஜபக்ஷவுடனும் பங்காளிகளாக இருந்துகொண்டு, அவர்களோடு தேன்நிலவு கொண்டாடிய டக்ளஸ் தேவானந்தா, அன்று மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டுமெனக் கூறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கும் போது, எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்தப் போராட்டத்தில் முதலாவது களப் பலியாகிய பெண் போராளி தனது சகோதரி எனவும், அவரையும் அவர் போன்ற பல பெண் போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளதாகவும், அதற்கான தார்மீகப் பொறுப்பு தனக்குள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று ஒரு சிலர் உயிரிழந்த முன்னாள் போராளிகளை நினைவுகூருவதாகக் கூறிக் கொண்டு நாடகமாடி வருவதைச் சபையில் குறிப்பிட வேண்டும் எனவும், கடந்த கால பாவங்களை கழுவிக் கொள்வதற்காக இவர்கள் இந்த நாடகங்களில் ஈடுபடுவது பரிதாபத்திற்குரிய விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

என்றாலும் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதை கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்வாறு கொச்சைப்படுத்தவதன் ஊடாக கடந்தகால பாவங்களுடன் கொச்சைப்படுத்தகின்ற பாவமும் சேர்ந்துவிட்டால் பிறகு எந்தச் சமுதாயத்திலும் அவர்களுக்கு பாவமன்னிப்பே கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

உரிமைப் போராட்ட நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடி அவற்றை இந்தியாவுக்கு கொண்டுசென்று வியாபாரம் செய்து கொள்ளை இலாபம் செய்துகொண்டிருந்தவர்கள் தமது பாவங்களை கழுவுவதற்காக இன்று பொலித் தமிழ்த் தேசியம் பேசி பாவமன்றிப்பு கேட்டுக்கொண்டிருப்பதாகவும், எனவே செய்த பாவங்களை எண்ணி இவர்கள் இப்போதாவது திருந்த முன்வருவதே எமது மக்களுக்கு அவர்கள் செய்கின்ற பேருதவியாக அமையும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு