ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மை – உறவினரின் கருத்தால் பரபரப்பு

இந்தியச் செய்திகள்

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்த நிலையில் எதிர்வரும் 5ம் திகதியுடன், அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திலும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவருடைய நெருங்கிய உறவினரான பெங்களூருவை சேர்ந்த லலிதா என்பவர் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் ஜெய்சிகா. அவரது சகோதரர் ஜெயராமின் மகள் தான் ஜெயலலிதா. கடந்த 1971ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் இறந்துவிட்டார். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இடையே அவ்வளவாக தொடர்பு இல்லாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த 1980ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை சென்னையில் வைத்து பிறந்தது உண்மை தான். எனது பெரியம்மாள் ஜெயலட்சுமி தான் அவருக்கு பிரசவம் பார்த்தார். அப்போது, ஜெயலலிதா எங்களிடம், தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கினார் என்று தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு வருடங்கள் எத்தனையோ கடந்து ஓடிவிட்டன. தற்போது ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்று அம்ருதா கூறுகிறார். அந்த பெண் குழந்தை அம்ருதா தானா என்பது தனக்கு தெரியாது என்ற போதிலும், ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை. இதுகுறித்து மருத்துவ பரிசோதனை (டி.என்.ஏ. பரிசோதனை) செய்தால் மட்டுமே தெரியவரும் என்றும் லலிதா மேலும் தெரிவித்துள்ளார்.