யாழில் விமான பயணச் சீட்டு மோசடி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணத்திலுள்ள வெளிநாட்டு பயண முகவர் நிறுவனம் ஊடாக போலிய விமான பயண சீட்டு கொடுக்கப்பட்டு இந்தியா செல்லவிருந்த பயணி ஒருவரிடம் ஒரு இலட்சத்து 28 ஆயிரும் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு செல்வதற்கான 03 விமான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ஒருவர் யாழ். கோவில் வீதியில் இயங்கி வந்த முகவரகம் ஒன்றின் உதவியினை நாட்டியுள்ளார். விமான பற்றுச்சீட்டினை வழங்குவதற்காக குறித்த முகவரகத்தினால் முற்பணமாக 45 ஆயிரும் ரூபா கோரப்பட்டுள்ளது. அவர் 45 ஆயிரம் ரூபாவுக்காக வங்கி காசோலை ஒன்றினை வழங்கியுள்ளார்.

கடந்த மாதம் குறித்த காசோலையூடாக அந்த முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், மீண்டும் முகவர் நிறுவனம் ஊடாக பணம் கோரப்பட்ட நிலையில், 82 ஆயிரம் ரூபாவுக்காக காசோலை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சாசோலையினை வங்கி ஊடாக பணத்தினைப் பெற்றுக் கொள்ளாமல் வேறு ஒருவரிடம் கொடுத்து, குறித்த முகவர் நிறுவன உரிமையாளர் பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். பணத்தினைப் பெற்றுக் கொண்ட பின்னர் இந்தியாவிற்கான விமான பயணத்திற்கான 03 போலி பற்றுச்சீட்டினை வழங்கியுள்ளார்.

குறித்த போலி பற்றுச்சீட்டினை கொண்டு சென்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் சென்ற போது அது போலி பற்றுச்சீட்டு என்பது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, இது தொடர்பில் குறித்த முகவர் நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அது போலி விமான சீட்டு என்று தெரிவித்துள்ளதுடன், பணத்தினை மீளக் கையளிக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சென்று குறித்த முகவர் நிறுவன நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, குறித்த முகவர் நிறுவன உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.