தமிழரசுக் கட்சிக்கு எதிரான பலம்மிக்க அணி உருவாகும் – சுரேஷ் சூளுரை

மிக பிழையான அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையை, மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்களென உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக காட்டுவதற்கு தமிழரசு கட்சி முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதனை மறுதலிப்பதற்கு பலமான ஒரு எதிரணி நிச்சயமாக வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருந்த போதிலும், தற்போது சில பிரச்சினைகள் எழுந்திருப்பதாகவும், அந்தப் பிரச்சினை கொள்கை ரீதியான பிரச்சினை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால், தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதனை ஒரு தற்காலிக ஒழுங்காக எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்த சந்தர்ப்பம் இருப்பதாகவும், அதற்கான காலம் முடிவடைந்துவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காக கொண்ட தேர்தல் என்ற போதிலும், உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்களென காட்டுவதற்கு தமிழரசு கட்சி ஆர்வம் காட்டுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிகப்பிழையான ஒன்று என்பதால், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகளை கைப்பற்றுவதனால் தமிழரசு கட்சி மேற்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு பிழையான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பொதுவான ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கும் நிலையில், தேசிய கொள்கைகளை ஒத்துக்கொண்டு, கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டதாகவும், அதில் சமூகத்திலுள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்ததாகவும், அந்தவகையில் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்த போதிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரித்துள்ளதுடன், அதற்காக பல்வேறு காரணங்களையும் கூறியிருக்கின்றது. ஆகவே, எமக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை. அதேபோல் நாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது. எனவே என்ன வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என்பது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு