உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே எமது இனம் வாழ்கிறது – சபையில் டக்ளஸ் ஆதங்கம்

தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் வாழும் தேசிய இன மக்கள் என்ற போதிலும், உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்களென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற சுகாதாரம் மற்றும் போஷணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வடமாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 3,236 பேர் நோயாளர்களாக இனங்காணப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்திருந்தனர்.

ஆனால், இந்த வருடத்தின் கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள், 6,833 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அந்த வகையில், வடக்கில் ஏனைய மாவட்டங்களைவிட யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோய்த் தொற்றாளர்கள் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. அதாவது, 4,726 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கும் திடீரென அதிகரித்துள்ளதாக, மாவட்டப் பூச்சியியல் ஆய்வுப் பிரிவு தெரிவித்திருக்கின்றது.

அத்துடன், வடக்கில் தற்போது மலேரியா நோயினைப் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கமும் காணப்படுகின்றன. இது தொடர்பில் தான் ஏற்கனவே சுகாதார அமைச்சர் அவர்களது அவதானத்துக்குக் கொண்டு வந்திருந்ததாகவும், இவ்வகை நுளம்புகள், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாகவே அறிய முடிகின்றது.

தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால், மேற்படி நோய்களைப் பரப்புகின்ற நுளம்பு வகைகளின் பெருக்கங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள், அனைத்துத் துறைகள் சார்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு