தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் ஸ்ரீகாந்தா

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனித்துப் போட்டியிடும் நிலைமைக்கு தமிழரசு கட்சியின் போக்குகளே காரணமென அதன் செயலாளரும் சட்டத்தரணியுமான நா.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையலான பேச்சுவார்த்தையின் பின்னர் எமது நிலைப்பாடு மாறியுள்ளது. தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் புளொட் ஆகியவற்றின் கோரிக்கைகளிற்கு காட்டிய போக்கினை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சம்பந்தமாக எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத வகையில்தான் தமிழரசு கட்சியின் சார்பாக கலந்துகொண்ட பெரும்பாலான பிரதிநிதிகளின் நிலைப்பாடு. அதிலும், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாம் மட்ட தலைவர்களின் பேச்சு இருந்தது.

பல விடயங்களில் அனுசரணையாக இருந்தபோதும், மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் விடயங்களில் தமிழரசு கட்சியின் எடுத்தெறியும் பேச்சு எமக்கு கசப்பான தன்மையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் அபிலாசைகளை உணர்ந்து எமது கோரிக்கைகளை எவ்வளவிற்கு மட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவிற்கு மட்டுப்படுத்தியிருந்தோம்.

மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தொடர்பான சரியான நிலைப்பாட்டினை எடுக்க முடியாததற்கான பொறுப்பினை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்வரும் தேர்தலை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து எதிர்கொள்ளப் போவதில்லை. அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் தேசிய நீரோட்டத்துடன் இணைந்துள்ள பல கட்சிகளுடன் கருத்துப் பரிமாற்றத்தினைக் கொண்டிருந்தோம்.

தமிழ் தேசிய நீரோட்ட கொள்கையினை கொண்டுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதில் இப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எந்தளவிற்கு பரந்து விரிந்த ஒற்றுமையைக் கொண்டு வர முடியுமே அந்தளவிற்கு உழைப்போம். அதற்காக எம்மை அரசியல் ஏமாளிகளாக எவராது எடை போட்டால், அந்த தவறுக்கான விளைவிற்கு அவர்களே பொறுப்பாளிகளாக இருக்க வேண்டி நேரிடும்.

அதேநேரம், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் பேச்சுவார்;த்தையில் ஈடுபடவுள்ளோம். எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் அங்கத்துவ விபரங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், அதற்குரிய நடவடிக்கைகளை மிக விரைவில் எடுப்போம். எனவே, எமது நீண்ட அரசியல் பயணத்தில் இது ஒரு கடினமான விடயமல்ல. இது ஒரு சாதாரண விடயம். – என்றார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு