தொழில்வாய்ப்புகளில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி

எந்தவொரு துறைகளிலும் அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்ற போது, கட்டாயமாக இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருக்கின்றோம் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தமிழ் மக்களும் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு அதை செயல் வடிவில் காட்ட வேண்டும். தமிழர்களுக்கும் இந்த நாட்டில் உரிமை இருக்கின்றது என்பது ஏற்றுக் கொண்டு, அதனையும் செயல் வடிவில் காட்ட வேண்டும். தொழில் உரிமையும் அதில் முக்கியமானதொன்று என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை உடனடியாக செயலில் காட்ட வேண்டும்.

மேலும், தற்போது பணியில் இருக்கின்ற அரச சேவையாளர்களது வினைத்திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டியதும், அவர்களை ஒழுங்குற முகாமைத்துவம் செய்யப்பட வேண்டியதும் அவசியமாகவுள்ளது. பொது மக்களிடமிருந்து அதிகளவிலான வரிகளை விதித்து, பொது மக்களுக்கு பயனற்ற அரச பணியாளர்களுக்கு அதனை ஊதியமாக வழங்கி வருவதானது எந்த வகையிலும் நியாயமாகாது. அரச ஊழியர்கள் ஒருநாளில் நான்கு மணி நேரமே அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனரென அண்மையில் எமது கணக்காளர் நாயகம் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அண்மையில், இலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு தொழிற்சங்கத்தின் ஆய்வின்போது, அரச பணியாளர்களில் 60 வீதமானவர்கள் கடமை நேரத்தில் முகநூல் பயன்பாட்டிற்கென 03 மணி நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது.

வடக்கு – கிழக்கு உட்பட நாட்டில் பல மாகாணங்களிலும் வேலைவாய்ப்புகளற்ற நிலையில், பட்டதாரிகள் பலர் காத்திருக்கும்போது, ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 128 அரச பணியாளர்கள், அதாவது நூற்றுக்கு 17.8 வீதமானவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில்கூட சித்தியடையாதவர்களாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இவை அனைத்தும் அவதானத்தில் கொள்ளப்பட்டு, அரச பணியாளர்கள் விடயமானது சீரமைப்பிற்கு, மீள்முகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்படல் அவசியமாகின்றது. நிலைபேறு அபிவிருத்தியினை எதிர்பார்த்திருக்கின்ற நாட்டில், வினைத்திறனற்ற அரச பணியாளர்களை வைத்துக் கொண்டு ஒருஅடி கூட முன்னேற முடியாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு