சேவல் சின்னம் தனித்தும், கூட்டாகவும் போட்டியிடும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், சில பகுதிகளில் தனித்தும் சில பகுதிகளில் கூட்டாகவும் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக, மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், சில தொகுதிகளில் தனித்து தனது சேவல் சின்னத்திலும் சில பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டாகவும் போட்டியிடவுள்ளது.

இதற்கமைவாக, நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதியிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும், கண்டி, பன்வில பிரதேச சபை, மாத்தளை மாநகர சபை, ரத்தொட்டை பிரதேச சபை ஆகியவற்றில் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கண்டி, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில், ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துப் போட்டியிடவுள்ளதுடன், கொழும்பு மாநகர சபையிலும், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸடன் இணைந்து, சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஏனையக் கட்சிகளுடன் இணைந்துப் போட்டியிடுவது தொடர்பிலான மேல்மட்ட முடிவுகள் அனைத்தும் எட்டப்பட்டுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடுகளில் குளறுபடி நிலவுவதால், அது தொடர்பில் பேசித் தீர்மானிக்கப்படும் என்வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு