இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்தது அமெரிக்கா

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உரையாற்றிய ட்ரம்ப் அமெரிக்காவின் நீண்டகால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்ததுடன், அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்டகால நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையாகக் கருத முடியாதென ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வுத் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும், அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ட்ரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

முன்னதாக ட்ரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு