ஆசனப் பங்கீட்டால் கூட்டமைப்பு பிளவடைய இடமளியோம்

ஆசனப்பங்கீட்டின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட இடமளிக்கமாட்டோமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ரெலோ இயக்கம் தனித்து போட்டியிட முடிவெடுத்து அறிவித்திருந்த நிலையில் நேற்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் தமிழரசு கட்சி அலுவகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலின் ஆசனப்பங்கீடு தொடர்பாக ரெலோ இயக்கம் முன்வைத்த கோரிக்கைகளை தொடர்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், தானும் ஆராய்ந்துள்ளதாகவும், அதில் பல இடைவெளிகளை நிரப்பக் கூடியதாக உள்ளதாகவும், ரெலோ இயக்கமே தாங்களாக சில விட்டுக்கொடுப்புக்களை செய்வதாக கூறியிருந்தமை மிகவும் வரவேற்கத்தக்க ஒரு அணுகுமுறை என்றும், எமது கட்சி பலமாக இருக்கின்றதென்று தெரிந்தும், வெல்லக்கூடிய நிலைமை இருந்தும்கூட ஒற்றுமையை காரணமாக வைத்து விட்டுக்கொடுப்புக்களை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை அரசியலில் இருக்கின்ற நிலைமைக்கு சீர்தூக்கி பார்த்து ஒற்றுமை தான் மிகவும் அவசியமான ஒன்று என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினரும் செய்யும் விட்டுக்கொடுப்புக்கள் என்பதால், இந்தப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்;வினை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ரெலோ இணக்கும் மாற்றுவழிகள் தொடர்பில் பேசியிருப்பதாகவும், புளொட் இயக்கத்திற்குரிய இடங்களையும் ஒதுக்கியிருப்பதுடன், மூன்று கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற போது, சில இடங்களில் ஒதுக்கீடுகளை செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை விடுத்து இன்னும் விட்டுக்கொடுப்புக்கள் செய்ய வேண்டியிருந்தால், விட்டுக்கொடுத்து, இன்று தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கொடுத்துள்ள இந்த பாரிய பணியில் வலுவான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும், ஆசனப் பங்கீட்டின் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகிப் போனதென்பற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு