பிள்ளையுமில்லை – தேங்காய் பிடுங்கவும் வழியில்லை

எனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது காய்க்கின்ற போதிலும், அதை அனுபவிக்க தனது பிள்ளையும் இல்லை, தங்களது பூர்வீகக் காணிக்குள் சென்று தேங்காய் பிடுங்கவும் முடியாத நிலையில் இருப்பதாக முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் இரண்டு தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நவரத்தினம் இந்திராணி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பகுதியில், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி, முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உரிய பதில் கிடைக்கவேண்டுமெனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றும் (13) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இப்போராட்டங்கள் இரண்டிலும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வரும் நவரத்தினம் இந்திராணி என்ற தாய், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, எல்லோரும் வருகின்றார்கள், பதிவுகளை எடுக்கின்றார்கள், ஆனால், எந்த முடிவும் இல்லை. பிள்ளைக்காக நஷ்டஈடு தருவதாகச் சொல்கின்றார்கள். ஆனால் நஷ்டஈடு பெறுவதாக இருந்தால் நான் அதை ஆரம்பித்திலேயே பெற்றிருப்பேன். பிள்ளை உயிருடன் எங்கோ இருக்கின்றது என்ற நம்பிக்கையில்தான் நான் இன்றும் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

எங்களது காணியின் இரண்டு ஏக்கரில் எனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது நன்றாகக் காய்க்கின்றது. அதன் பலாபலன்களை படையினரே அனுபவிக்கின்றனர். எனது பிள்ளையின் உழைப்பால் உருவான இந்தத் தென்னைகளிலிருந்து ஒரு தேங்காய் ஏனும் எடுக்கவில்லை. பிள்ளையும் இப்போது என்னிடம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு