சீருடை வவுச்சர் விநியோகத்தில் முறைகேடுகள்

நுவரெலியா மாவட்டம், வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் மொழிமூல பெரும்பாலான பாடசாலைகளின் மாணவர் சீருடை விநியோகத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச சீருடைகளுக்கு வவுச்சர் வழங்கும் நடைமுறையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மாணவர்களுக்கு அதற்கான வவுச்சர்களும் வழங்கப்பட்டுள்ளன.

வவுச்சர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக நிலையங்கள் தொடர்பிலும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இரு கல்வி வலயங்களுக்கும் உட்பட்ட சில தமிழ் மொழிமூல பாடசாலைகளில் மாணவர்களின் வவுச்சர்கள் அதிபர்கள், ஆசிரியர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு பதிலாக மாணவர்களுக்கு நேரடியாக சீருடைத் துணிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீருடை துணிகள் தரம் குறைவானதாக காணப்படுவதாகவும், பெரும்பாலான மாணவர்கள் வவுச்சர்களுக்கு பதிலாக நேரடியாக சீருடைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த இரு கல்வி வலயங்களிலும் அமைந்துள்ள ஒருசில பாடசாலைகள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களை அவர்களிடமே கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயமானது மாணவர்களின் உரிமைகளை மீறும் செயல் எனவும், இந்தச் செயற்பாடு மூலம் மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகத்தை வைத்து இலாபம் சம்பாதிக்கும் செயற்பாட்டில் அதிபர்களும் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு