பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 08 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவரை பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு நீதிபதி உபாலி குணவர்த்தனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக அந்தோனிப்பிள்ளை மரியசீலன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே செல்வம் அடைக்கலநாதன் பிணையில் செல்ல சட்டமா அதிபர் அனுமதித்திருந்ததுடன், மரியசீலனை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன், குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியாவில் இடம்பெற்று வந்த நிலையில் பின்னர் சட்டமா அதிபரால் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கானது நேற்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது மன்றில் பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா முன்னிலையாகியிருந்தார். இவரால் குறித்த இரண்டாம் பிரதிவாதியை பிணையில் விடுவிக்க வேண்டும். ஏற்கனவே, சட்டமா அதிபருக்கு செய்யப்பட்ட விண்ணப்பத்தை சட்டமா அதிபர் ஏற்றுக்கொண்டு சம்மதித்துள்ளதாக அரச சட்டவாதி மன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நீதிபதி குறித்த நபரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.