இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்ல முடிவு கிடைக்கும் – இரா.சம்பந்தன் தெரிவிப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் ஆலையடிவேம்பு, தர்ம சங்கரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இந்த நாடு இங்கு வாழுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுக்குரியதே தவிர, தனிப்பட்ட ஒரு இனத்திற்கு உரித்துடையதல்ல. இதில் தனிப்பட்ட ஒரு இனம் உரிமை கோரமுடியாது. இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு இனமும் சமத்துவமாகவும் சமாதானமாகவும் கௌரவமாகவும் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

நீதி, நியாயத்தின் அடிப்படையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். நல்லிணக்கம் ஒற்றுமை என்பன ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட யுத்தத்தினால் பல இராணுவச் செலவுகள் மற்றும் இழப்புகள் இடம்பெற்றதனால், நாடு முன்னேற முடியாது, பொருளாதார ரீதியாக பல பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆசியாவில் பல்வேறு நாடுகள் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளன. சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகள் முன்னேறியுள்ளன அதனால் அம்மக்கள் கௌரவமாக வாழுகின்றனர். ஆனால் இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் அந்நிலையினை இன்னும் அடையவில்லை. இந்த நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படமையினால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை அடைந்து இருக்கின்றது. இதனை மாற்ற வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தமிழர்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்திற்கு வாய்ப்பிருந்தது. 1987ம் ஆண்டுக்குப் பிற்பாடும் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அது எமக்குக் கிடைக்காது கைநழுவிப் போய்விட்டது. இதன் காரணமாக தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்டுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு எம்முடைய மக்கள் எம்முடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இனிமேல் எமது மக்களுக்கு வழங்கப்படுகின்ற எந்தத் தீர்வாக இருந்தாலும் எமது மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஏற்றுக்கொள்வோம். அந்த விடயத்தில் எமது கட்சி உறுதியாக இருந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.