காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் – டக்ளஸ்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் வேதனைகளை காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளே அறிவர். அந்த வேதனையை வார்த்தைகளால் கூறி, உணரவைக்க முடியாது என்பதனாலேயே இன்று ஒரு வருடமும் 35 நாட்களுமாக காணாமற்போன உறவுகளைக் கண்டறிவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மக்களின் வேதனைகள் பலருக்கு இங்கே புரியாமல் இருக்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்படுதலில் இருந்து எல்லா ஆட்களையும், பாதுகாத்தல், பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் தொடர்டபில் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாத்தல் தொடர்பிலான சட்டமென்பது அவசியமானதொன்றாகும். ஏனெனில் வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்பட்டவர்களால் ஏற்படுகின்ற வலியினை உணர்ந்தவர்கள் நாங்கள் என்பதால், அத்தகையதொரு விடயம் தொடர்பில் எமது மக்களினதும், எனதும் வேதனைகளைப் பகிர்ந்து கொள்;வதாகத் தெரிவித்துள்ளார்.

எனது உடன் பிறந்த சகோதரர் வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்பட்டவர். என்னுடன் இருந்த உடன் பிறவா சகோதரர்கள் பலர் வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள். நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எமது தமிழ் பேசுகின்ற மக்களின் உறவுகளில் பலர் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள். இங்கே இருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் காணாமற் போகச் செய்யப்பட்டவர்கள். இந்த நாட்டில் காணாமற் போகச் செய்யப்பட்டவர்களுக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று திசைகள் கிடையாது எனவும், தமிழ் அரசியல் கைதிகள் குறித்து நான் கதைக்கின்ற போதெல்லாம், ‘எமது நாட்டிலே அரசியல் கைதிகள் என எவருமே கிடையாது’ என ஒரு சிலர் கூறுவதைப்போல், ‘காணாமற் போனோரென இங்கு எவருமே இல்லை’ என எவராலும் கூற முடியாத வகையில் இன, மத, பேதங்களின்றி இந்த நாட்டில் நபர்கள் காணாமற் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவேதான் காணாமற் போனோரைக் கண்டறிவது தொடர்பிலான விசாரணைகளை 1971ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும்படி நாம் ஏற்கனவே கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நபர்கள் காணாமற்போனச் சம்பவங்கள், கொலைச் சம்பவங்கள் என்பன திசை திருப்பப்பட்டுள்ள நிலைமைகளும் இல்லாமல் இல்லை. கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டபோது, அது தொடர்பிலான குற்றச்சாட்டு திசைதிருப்பப்பட்டது. இப்போது இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீதி விசாரணைகளிலிருந்து உண்மை வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதேபோன்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகவும் சில குற்றச்சாட்டுகள் திசைதிருப்பப்பட்டிருந்தன. இவை தொடர்பிலும் நீதி விசாரணை அவசியம் வேண்டும் என்றே நாங்கள் இந்த அரசிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அத்தகைய நீதி விசாரணைகளின் போதுதான் அவற்றின் உண்மைகளும் வெளிவரும் எனவும், இத்தகைய திசைதிருப்பல்களில் சில அரசியல்வாதிகள், சில ஊடக அதிபர்கள், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் என பல்துறையினருக்கு பங்குண்டு. அரசியல் உள் நோக்கங்கள் காரணமாக, காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக, ஒரு சிலரது பிழைப்பிற்காக என இவ்வாறு இவை திசைதிருப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, பல்வேறு அரசியல் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளும திசைதிருப்பப்பட்டன. இன்று, அச்சம்பவங்கள் தொடர்பில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில், காணாமற்போகச் செய்தல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் ஒருவர் மீது அல்லது ஒரு தரப்பினர் மீது சுமத்தப்பட்டால், அது தொடர்பில் பக்கசார்பற்ற முறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அக் குற்றச்சாட்டு பொய்யானது எனக் கண்டறியப்பட்டால், அதன் உண்மைத் தன்மையை பகிரங்கப்படுத்துவதுடன், பொய்யானக் குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு எதிராக தற்போதுள்ள சட்ட மானியங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஏற்படுகின்ற சமூக, பொருளாதார, உடல், உள ரீதியிலான பாதிப்புகளுக்கேற்ப இழப்பீடுகளை வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகளையும் மேற்படி சட்டமூலம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.