சுதர்சிங் விஜயகாந்திற்கு சிறைத் தண்டனை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக இனங்கண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்ற போது அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப்போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 04 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விஜயகாந் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 119 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸாரால் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது.

சந்தேகநபர்கள் நால்வர் மீதான திருட்டுக் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. சந்தேகநபர்கள் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு வரும் பெப்ரவரி முதலாம் திகதி வழங்கப்படுமென யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.