பல்கலைக்கழக செயற்பாடுகள் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் அரச பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 30 உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் 14ஆவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாதாந்த நிலுவை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15000இற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருவதுடன், 2016ஆம் ஆண்டு உடன்பாடு காணப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு கல்விசாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போதைய உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசீம், கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னராக பேச்சுவார்த்தையொன்றை நடத்தியதாக தொழிற் சங்கங்கள் கூறுகின்றன.

எனினும் அதன் பின்னர் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அமைச்சர் சந்தர்ப்பம் வழங்கவில்லையென பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக யாழ். பல்கலைக்கழகத்திற்கான நீர் விநியோகம் நாளை துண்டிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதுடன், பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்ததன் பின்னரே மாணவர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவர்களுக்கான பரீட்சைகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளதால் அவற்றில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், வழமையான விரிவுரைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஸ்மன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.