இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் – டக்ளஸ் கோரிக்கை

சிறப்புச் செய்திகள் செய்திகள்

புனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்ட ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23ஃ2 நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுததுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த யுத்த காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டியிருந்தும் புனர்வாழ்வு அதிகார சபையின் சில நிபந்தனைகள் காரணமாக முன்னாள் இயக்க உறுப்பினர்களால் மேற்படி நட்ட ஈடுகளைப் பெற இயலாதுள்ளதாகத் தெரிய வருகின்றது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் அப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்ற மருத்துவச் சான்றிதழ்கள் கோரப்படுவதாகத் தெரிய வருகின்றது.

யுத்தம் இடம்பெற்றிருந்த காலப் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் அப்போது அந்தந்தப் பகுதிகளில் இயங்கியிருந்த மற்றும் புலிகள் இயக்கத்தினரால் செயற்படுத்தப்பட்டிருந்த மருத்துவ நிலையங்களிலேயே சிகிச்சைப் பெற வேண்டிய நிலை இருந்தது.

அந்தக் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவ மனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நட்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.