தந்திரோபாயத்தையே கையாள்கின்றோம் – மாவை

சிறப்புச் செய்திகள் செய்திகள்

பெரும்பான்மையற்ற உள்ளுராட்சி சபைகளில், தனித்துவமான ஆட்சியை அமைப்பதற்கு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சி தலைவருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்ற போது அதில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் பாதிப்புக்கள் உள்ள போதிலும், இத் தேர்தலில் வடகிழக்கில் கூட்டமைப்பு 40 இடங்களில் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ள போதிலும், இன்னொரு முறை இந்த பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முறைமையினால் பல இடங்களில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால்; தற்போது சபைகளை ஆட்சியமைப்பதில் நெருக்கடிகளும் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே, சபைகளை நல்லிணக்கத்துடன் நடாத்த வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எமது தேசம் போரால் அழிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை மீளக் கட்டியெழுப்பவதற்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கு பாரிய பொறுப்பு இருப்பதனால், அதற்கான திட்டங்களை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என்றும், வரவு செலவுத் திட்டங்களை தயாரித்து செயற்படுத்துவதற்கு சகலரையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நெடுந்தீவு, ஊர்காவற்துறை, சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய இடங்களின் சில உள்ளுராட்சி சபைகளில் தலைமைத்துவத்தைக் கோருவதற்கு எங்களுக்கு உறுப்பினர்கள் போதாமல் இருப்பதனால், அந்த இடங்களில் என்ன செய்வதென்பது குறித்து தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.