வெளிநாடுகளில் மரணிக்கும் பணியாளர்களுக்கான புதிய நடைமுறை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

வெளிநாடுகளில் பணியாற்ற சென்று மரணிக்கும் இலங்கையர் தொடர்பான புதிய நடைமுறை ஒன்றை வெளிவிவகார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்கான வாய்பபை அமைச்சு ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெளிநாடுகளில் மரணித்தவர்களின் உறவினர்கள் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது வெளிநாட்டில் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதனை அங்கீகரிப்பதற்காக குறித்த ஆவணங்களை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டியிருந்த நிலையில், புதிய முறைமையின் கீழ், மரணித்தவரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடிவதுடன், அவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து பிரதேச செயலாளர்களையும் அறிவுறுத்தும் வகையிலான சுற்றுநிரூபம் ஒன்றை உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

மரணித்தவரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கொழும்பிலுள்ள கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு அல்லது யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்திற்கு பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை எனவும், அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் அவற்றை செயற்படுத்திக் கொள்வதனை இந்த புதிய முறைமை இயலுமாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தருணமொன்றில் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திற்கு நீண்ட பிரயாணங்களை மேற்கொள்வதனையும், தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் செலவீனங்களையும் தவிர்க்க முடியும் என்பதுடன், இந்த புதிய ஏற்பாட்டினால் குறிப்பாக வெளிப் பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Trending Posts